Sunday, January 22, 2017

Cheyyaru

பெயர் செய்யாறு (அ) திருவத்திபுரம்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
நகராட்சி திருவத்திபுரம்
பூகோள அமைப்பு 12.6580°N 79.5424°E
நே வளையம் GMT + 5.30
மக்கள் தொகை 3,42,343
ஆண்:பெண் விகிதம் 1000:993
படிப்பறிவு 0.6908
அஞ்சல் குறியீடு 604407
தொலைபேசி குறியீடு 4182
வாகன பதிவு என் TN 25
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வட்நிரே
துணை மாவட்ட ஆட்சியர் பிரபு
நாடாளுமன்ற தொகுதி ஆரணி
நாடாளுமன்ற உறுப்பினர் (MP) திரு. வி.ஏழுமலை (அதிமுக)
சட்டமன்ற தொகுதி செய்யாறு
சட்டமன்ற உறுப்பினர் (MLA) திரு. கே.மோகன் (அதிமுக)

இடம்
   செய்யாறு இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் வடமேற்கு மூலையில் செய்யாறு நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரமாகும். இது திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு துணை மாவட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்கள் உள்ளன. மேலும் செய்யாறு ஓர் தனி கல்வி மாவட்டமாகும். இந்நகரம் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னைக்கும், வரலாற்று சிறப்புமிக்க காஞ்சிபுரத்திற்கும்அருகாமையில் உள்ளது.

   இந்நகரம் காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும், வேலூரில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும் மற்றும் சென்னையில் இருந்து 105 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்நகரம் SH 5 மற்றும் SH 45 சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

   அருகில் உள்ள ரயில் நிலையங்கள் காஞ்சிபுரம் ரயில் நிலையம் (30 கி.மீ.) மற்றும் காட்பாடி சந்திப்பு (60 கி.மீ.) ஆகும். அருகில் உள்ள விமான நிலையம் மீனம்பாக்கம் விமான நிலையம் (100 கி.மீ.) ஆகும்.

செய்யாறு நதி

   இந்த நதி தமிழ் நாட்டின்‌ திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் ஒரு பருவ கால ஆறு ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையில் உருவாகும் இந்த ஆறு பாலற்றின் துணை ஆறு ஆகும். ஜவ்வாது மலைத்தொடரின் நசமலையில் தோன்றி மேற்கு தெற்காக பாய்ந்து பின்பு செங்கம் அருகில் வடகிழக்காக திரும்பி திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் பாய்கிறது. ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காக பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள் போளுருக்கு அருகிலுள்ள சோழவரம் எனும் ஊரில் செய்யாறு உடன் இனைகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து உருவாகும் கமண்டல நாக நதி எனும் துணை ஆறு வாழபாந்தல் அருகில் இணைகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலத்தில் செய்யாறு ஆறாக வடக்கு கிழக்காக ஓடி காஞ்சிபுரத்தை அடுத்த பழையசீவராம் எனும் ஊரில் பாலாறுடன் இணைந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

   திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் ஓடும் செய்யாறு ஆறு மாவட்டத்தின் வேளாண் பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். செய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் கரைகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான போளூர், ஆரணி மற்றும் செய்யாறு அமைந்துள்ளன.

பெயர் காரணம்

   செய்யாறு என்ற பெயர் செய்யாறு என்ற நதி இங்கு ஓடுவதால்தான் தோன்றியது. 'சேய்' என்ற வார்த்தை பிள்ளை என்பதயும், 'ஆறு' என்ற வார்த்தை நதி என்பதயும் குறிக்கிறது. வரலாற்றில் பார்வதி (சிவன் மனைவி) அவரது மகன் முருகன் விளையாட தனது திரிசூலம் மூலம் உருவாக்கிய ஆறுதான் ச9ேயாறு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரின் பழைய பெயர் 'சேயாறு'. இதுதான் று மருவி செய்யாறு என்றழைக்கப்படுகிறது. அதேபோல, திருவத்திபுரம் என்ற பெயர் இங்குள்ள இறைவன் உயர்த்த மந்திரமான வேதத்தை ரிஷிகளுக்கு உரைத்ததால் வந்தது. 'திரு' என்ற சொல் இறைவனையும் 'ஓதுதல்' என்ற சொல் உரைத்தல் என்பதையும் குறிக்கிறது. இதன் பழைய பெயர் திருவோத்தூர் என்பதாகும். இதுதான் இன்று மருவி திருவத்திபுரம் என்று அழைக்கப்படுகிறது.

தொழில்

        2008 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தொன்றுதொட்டு செய்யாறு மக்களுக்கு வேளாண்மை சார்ந்த தொழிலும் நெசவுத் தொழிலும் மட்டுமே முக்கிய தொழில்களாக இருந்தன. செழிப்பான கிராமங்களால் சூழப்பட்டதால், செய்யாறு முக்கிய வேளாண் நகரமாக விளங்குகிறது. அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையமும் உழவர்சந்தையும் சுற்றுப்புற கிராமங்களிருந்து வரும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கின்றன. நெசவு இங்கு பாரம்பரிய தொழிலாக உள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறிகளின் மூலம் பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் நெய்யப்படுகின்றன.

        2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் செய்யாறு மிகப் பெரிய தொழில் வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செய்யாறுக்கு அருகில், செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் மாங்கால் கூட்டு சாலை அருகே செய்யாறு தொழிற்பேட்டை (Cheyyaru SIPCOT) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமும் (SEZ) அமைக்கப்பெற்று வருகின்றன. சென்னைக்கு அருகில் உள்ளதாலும் திருபெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டைகளின் இடப்பற்றாக் குறையை நீக்க மாற்று இடம் தேவைப்படுவதாலும் செய்யாறு தேர்ந்தெடுக்கப்படுள்ளது. ஆரம்பிக்கப்பெற்று இரு ஆண்டுகளில் தைவான் நாட்டின் Nike & Lotus காலணி தயாரிப்பகம், அசோக் லே-லாண்டின் அலுமினிய வார்ப்பகம், Llyods ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. தானியங்கி உதிரிபாகங்கள், கார் தொழிற்சாலைகள் மற்றும் எலெக்ட்ரானிக் தொழிற்சாலைகளும் அமைவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

மக்கள்தொகை

   தொழில்மயமாக்கல் காரணமாக மக்கள்தொகை துரிதமாக அதிகரித்துள்ளது. ஆற்றின் வடக்கு பகுதிகள் வேகமாக வளர்ந்துவருகின்றது. இந்த நகரம் 10.76 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்துள்ளது. இந்த நகரம் 3,270 நபர்கள்/ச.கி.மீ. என்ற அடர்த்தியை கொண்டுள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சி
ஆண்டு மக்கள் தொகை அடர்த்தி (ஆட்கள்/ச.கி.)
1951 14,411 -
1961 15,386 -
1971 19,274 -
1981 25,067 2,336
1991 31,210 2,900
2001 35,201 3,120
2011 3,42,343 3,270

மக்கள் தொகை
ஆண் பெண் மொத்தம்
நகரம் 25,060 25,208 50.268
கிராமம் 1,46,709 1,45,366 2.92.075
மொத்தம் 1,71,769 1,70,574 3,42,343


மத அடிப்படையிலான மக்கள்தொகை
மதம் மக்கள்தொகை
இந்துக்கள் 88.60 %
இசுலாமியர்கள் 09.40 %
கிறிஸ்தவர்கள் 01.11 %
சமணர்கள் 00.46 %
மற்றவை 00.43 %

எழுத்தறிவு விகிதம்
        இந்நகரின் எழுத்தறிவு விகிதம் எப்பொழுதும் மாவட்ட எழுத்தறிவு விகிதத்தை விட அதிகமாகத்தான் இருக்கிறது. 1991ல் 62.5 சதவிகிதமாக இருந்த எழுத்தறிவு கணிசமாக அதிகரித்து இப்போது 69 சதவிகிதமாக உள்ளது.
ஆண் பெண் மொத்தம் சதவிகிதம்
நகரம் 20,877 18190 39,067 77.71 %
கிராம்ம் 1,12,142 85284 1,97,426 67.59 %
மொத்தம் 1,33,019 1,03,474 2,36,493 69.08 %


கல்வி
        செய்யாறு நகரம் பழமையான மற்றும் மிகப்பெரிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு புகழ்பெற்றதாகும். செய்யாறு ஓர் தனி கல்வி மாவட்டமாகும். அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உலகம் முழுவதும் முன்னாள் மாணவர்கள் அமைப்பை கொண்டுள்ள பெரிய பள்ளியாகும். இந்த பள்ளிக் கட்டிடம் ஆகஸ்ட் 31, 1931 இல் திறக்கப்பட்டது. அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி புலவர் கா.கோவிந்தன் அவர்களின் முயற்சியால் 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி 69 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இந்த கல்லூரி முதலில் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்தது. 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட பின்னர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இணைந்தது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகரிப்பு சபையினால் மூன்று நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளளது. இது பி.ஏ., எம்.ஏ., பி.எஸ்ஸி, எம்.எஸ்ஸி. மற்றும் பிஎச்டி படிப்புகளை வழங்குகிறது. சமீபத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.

சிறப்பு

வேதபுரீஸ்வரர் மற்றும் பட்சீஸ்வரர் ஆலய பொது வரலாறு
        வைகுண்டத்தில் திருமாலின் வாகனமான கருடன் திருமாலை தாங்கும் தானே ஈரேழு லோகங்களிலும் சிறந்தவன் என்றும் திருக்கயிலையில் நிறைந்திருக்கும் சிவபெருமானின் வாகனமான நந்திக்கு தானே ஈரேழு லோகங்களிலும் சிறந்தவன் என்றும் கர்வம் இருந்தது. இதனை அறிந்த இறைவன் இருவரின் ஆணவத்தை நீக்க நினைத்தார். பிரதோஷ காலத்தில் திருமால் திருக்கயிலைக்கு கருடன் சென்றார். கருடன் தன் கர்வத்தால் தன் திறத்தை இந்த நந்தியிடம் காண்பிப்போம் என்று நந்தியின் முன் நின்றது. நந்தியும் கர்வத்தமையால் நந்தியின் மூச்சு காற்று பட்டதும் முன்னும் பின்னும் கருடன் பனிப்பாறையில் முட்டிக்கொண்டது. இதனை தொடர்ந்து இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர்/ இதனால் சினமுற்ற சிவபெருமானும் திருமாலும் நந்திக்கும் கருடனுக்கும் மண்ணுலகம் செல்ல சாபமிட்டனர்.

        மண்ணுலகம் வந்த கருடனும் நந்தியும் சிவபெருமான் நின்ற கோலத்தில் வேதத்தின் மெய்ப்பொருளை முனிவர்களுக்கும் வானவர்களுக்கும் ஓதும் ஊரான திருவோத்தூர் வந்தடைந்தனர். வேதத்தை கற்ற கருடனும் நந்தியும் வேதத்தின் மெய்ப்பொருள் சிவமே என்று உணர்ந்தனர். பின்னர் கருடன் வைகுண்டாதிபதியையும் நந்தி திருக்கயிலை பகுதியையும் அடைய வேதநாதனிடம் விண்ணப்பித்தனர். இறைவன் சாப விமோற்சனம் அளித்தார். இவ்வூரில் சூரிய உதயத்தின்போது கருடனும் சூரிய அஸ்தமனத்தின்போது நந்தியும் வழிபட சாபம் நீங்கும் என்றார். அவ்வாறே கருடன் கிழக்கு நோக்கி சிவலிங்கத்தையும் நந்தி மேற்கு நோக்கி சிவலிங்கத்தையும் பூஜித்து வந்தனர். பக்தி நிறைந்த இருவரின் பூஜையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் உமையாளுடன் எழுந்தருளி அருளினை வழங்கினார். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை மையமாகக் கொண்டு பூஜித்தமையால் இந்த பகுதி பரிதிபுரம் (பரிதி - சூரியன்) என்றும் கருடன் பூஜித்த சிவபெருமான் பார்வதி சமேத பட்சீஸ்வரர் என்றும் நந்தி பூஜித்த சிவபெருமான் தையல் நாயகி சமேத நந்தீஸ்வரர் என்றும் வழங்க இறைவன் அருளினார். திருக்கயிலை எய்தும் முக்திபேறை கருடனும் வைகுண்டம் பதியும் முக்திபேறை நந்தியும் பெற்றனர்.

தலம்
திருவோத்தூர், பரிதிபுரம் மற்றும் வழூர்பேட்டை

தீர்த்தம்
செங்குந்தர் தோப்பு என்னும் பகுதியில் அமைந்த பட்சிதீர்த்தம் (எ) கருடதீர்த்தம்

விருட்சம்
வில்வமரம், வன்னிமரம்

உற்சவ காலம்
வைகாசி விசாக பிரம்மொற்ச்சவம்

வேதபுரீஸ்வரர் (மறையருளிய ஈசன்) ஆலயம்
        இந்நகரில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதபுரீஸ்வரர் (மறையருளிய ஈசன்) ஆலயம் உள்ளது. இது செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் தொண்டை மண்டலத்தின் 32 பாடல்பெற்ற தலங்களுள் எட்டாவது தலமாகும். இங்கு சிவன் மறைகளைப் (வேதங்களை) புரிபவனாக மேற்கு நோக்கி அமைந்துள்ளார். சிவனடியார் ஒருவர் நதிக்கரையில் பணை மரங்களை நட்டு சிவனை வணங்கி வந்தார். அப்பனை மரங்கள் அனைத்தும் கனி தராத ஆண் பனைகளாகின. இதனை கண்ட சமணர், அச்சிவனடியாரை ஏளனம் செய்தனர். இதனைச் செவியுற்ற திருஞானசம்பந்தர் சமணர்களோடு சொற்போரில் ஈடுபட்டார். இருவரும் தத்தம் இறைவனை வேண்டி தமிழ் செய்யுள் ஏற்றி செய்யாற்றில் விட்டனர். திருஞானசம்பந்தரின் செய்யுள் எதிர் நீந்தி ஒரு ஊரில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்தான் இன்று செய்யாறைவென்றான் என்றழைக்கப்படுகிறது. சமணர்களின் செய்யுள் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அனகப்பதூர் எனுமிடத்தில் ஒதுங்கியது. திருஞானசம்பந்தர் சிவனை வேண்டி பத்து பதிகங்களைப் பாடி ஆண் பனைகளை பெண்பனைகளாக மாற்றினார். இன்றும் இத்தல விருட்சமான பனை மரங்கள் கார்த்திகை மாதத்தில் ஆண் பனைகளாக பனை பூக்களையும், சித்திரை மாதத்தில் பெண் பனைகளாக பனை கனிகளை ஒரே மரத்தில் விளைவிக்கின்றன. இது வேறு எங்கும் இல்லாத தாவரவியல் விந்தை ஆகும். சிவனை நோக்காது வாயிலை நோக்கி அமர்ந்துள்ள நந்தி இக்கோவிலின் இன்னொரு சிறப்பாகும். வேதங்களை புரியும் இறைவனுக்கு இடையூறுகள் வராமலிருக்க நந்தி சிவனை நோக்காமல் வாயிலை நோக்கி காவல்காப்பதாக நம்பப்படுகிறது. ஒரு சமயம் சிவபக்தரான தொண்டை மன்னனை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக வாயிலை நோக்கி நந்தி திரும்பியது எனும் செவி வழி கதையும் வழக்கில் உண்டு. ஒரே இடத்தில ஐம்பூத(பஞ்ச)தலங்கள், ஆறடி உயரத்தில் தென்முகக் கடவுள் ஆகியவையும் இத்தலத்தின் சிறப்புகளாகும். தொண்டை மன்னர்கள், பல்லவர்கள், விஜய நகர மன்னர்கள் மற்றும் சோழர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்தனர். கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள கன்னட, தெலுங்கு மொழி கல்வெட்டுகள் விஜயநகர மன்னர்களின் பங்களிப்பையும், 11 ஆம் மற்றும் 13 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த சோழர்களின் குறிப்புகளும் இக்கோவிலின் வரலாற்றை பறைசாற்றுகின்றன. இத்தகைய சிறப்பு மிக்க இக்கோவில் உள்ளூர்வாசிகளைத் தவிர வேறு எவராலும் அறியப்படாதது வேதனையே. சித்திரை மாதத்தில் நடைபெறும் ஆற்றுத்திருவிழா, தெப்பல்-தோப்பு திருவிழா மற்றும் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகியவை சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் கோலாகலங்களாகும். தினமும் முக்கால பூசைகள், பிரதோஷ சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

பட்சீஸ்வரர் ஆலயம்
        இந்நகரில் மற்றொரு புகழ்பெற்ற ஆலயமான பட்சீஸ்வரர் ஆலயமும் உள்ளது. இது நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை
        இந்நகருக்கு வெளியே, 5 கிமீ தொலைவில் செய்யாறு-வந்தவாசி சாலையில் தமிழ்நாட்டின் முக்கிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்றான செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இது 1991ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதனை நமது மறைந்த முன்னாள் பாரத பிரதமர் 'ராஜீவ்காந்தி' அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த ஆலை 2500 மெட்ரிக் டன் கொள்ளளவைக் கொண்டது.

பால் பதனிடும் நிலையம் & பால்கோவா தயாரிப்பகம்
        இந்நகரில் ஆவின் பால் பதனிடு நிலையம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களிருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் பால் குளிரூட்டப்பட்டு சென்னைக்கு செல்கிறது. இவை தவிர தனியாருக்கு சொந்தமான பெரிய பால்கோவா தயாரிப்பகமும் உள்ளது. இங்கு நாள்தோறும் தயாராகும் பால்கோவா சென்னை, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அனுப்பபடுகின்றது.

1 comment:

  1. நெஞ்சைத்தட்டிச்சொல்லு செய்யாறு என்று.

    ReplyDelete